-முடிந்தால் சி.ஐ.டியில் முறையிடுங்கள்-
சட்டவிரோத கொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டில் எமது அரசாங்கம் எந்தவொரு தவறையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை பயன்படுத்தி அது தொடர்பில் விமர்சிப்பவர்கள் சி.ஐ.டிக்கு சென்று அது தொடர்பில் முறையிட முடியும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவீன தலைப்பு மீதான குழ்நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
மேற்படி கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் எமது அமைச்சர்கள் எவரும் தவறிழைக்கவில்லை. எவராயினும் அதிகாரிகள் அவ்வாறு தவறுகள் அல்லது முறைகேடுகள் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் நான் கூற விரும்புவது, பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளை வைத்துக்கொண்டு சபையில் எம்.பிக்கள் தெரிவிக்கும் அந்த விவகாரம் தொடர்பான விடயங்களை, குறித்த விசாரணைக்கு வசதியாக சி.ஐ.டியில் சென்று அவர்கள் முறைப்பாடாக தெரிவிக்க முடியும். அவ்வாறு சிஐடிக்கு செல்லாமல் இங்கு அது தொடர்பில் தெரிவிப்பதில் பயனில்லை சி.ஐ.டிக்கு சென்று முறையிடுங்கள் என்று நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.















