-முஜிபுர் ரஹ்மான கூறுகிறார்-
கொழும்பு மாநகரசபையின் 2026ம் அண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக மாநகரசபையின் கட்டுப்பாட்டை தம்வசம் எடுத்துக் கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சி மாநகரசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, முதல்வர் ஒரு வெறும் பொம்மையாகவே மாறிவிடுவார் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு தோல்வியடைந்துள்ளதால், சபையின் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சியிடம் இருப்பதை இது உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரியாணியை வழங்கி மாநகர சபையொன்றை ஆட்சி செய்ய முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது என அவர் தெரிவித்தார்.
முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பாக அமையாமல், பகிரங்க வாக்கெடுப்பாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சிகள் மாநகரசபையைக் கைப்பற்றியிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம், நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியால் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபையின் எதிர்கால நிர்வாகம் குறித்து கடும் அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் என்பது கொழும்பு நகரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதே தவிர, சபையைத் தீர்மானிப்பதல்ல என கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் தெரிவித்துள்ளார். ஆளும் தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம், எதிர்க்கட்சிகளின் கூட்டு எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டை ஏற்றது முதல், தேசிய மக்கள் சக்தி நிர்வாகமானது கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களுடனும் சுமூகமாகவே பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
‘நீங்கள் தோற்கடித்தது தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்தை அல்ல. உங்கள் மனச்சாட்சியையும், மனச்சாட்சியின் வரவு செலவுத் திட்டத்தையுமே தோற்கடித்துள்ளீர்கள்’ என அவர் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.


















