-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார –
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக் கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் .பி. பெரேராவால் நேற்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, அஜித் .பி. பெரேரா, அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தி தனது பெற்றோருக்காக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அவர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி வெளிநாடு சென்று, பின்னர் திரும்பி வந்து ஜனாதிபதி ஆகினார். கோட்டாபயவை கண்டு அஞ்சியவர்கள் இப்போது வீரவசனம் பேசுகின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியான மறுநாளே, அவருக்கு இருந்த விலக்கீட்டுரிமை காரணமாக வழக்கு கைவிடப்பட்டது. இப்போது அவருக்கு அந்த உரிமை இல்லை.
ஓராண்டு ஆகியும் இந்த வழக்கு ஏன் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை? இந்த நாட்டின் பொருளாதார அழிவுக்குக் காரணமான ஒரு பாரதூரமான வழக்கு இது. சட்டமா அதிபருடன் இணைந்து இந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக்கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீர வசனம் பேசுவது நகைப்புக்குரியதாகவுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
















