-பேரிடரின் பின்னரான மிள்கட்டுமான சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்-
‘டித்வா’ பேரிடரின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கர், நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து கலந்துலையாடல் நடத்தினார்.
இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா முன்மொழிந்துள்ள மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமான உதவித் தொகுப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
அத்துடன், பேரிடர் காலங்களில் அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்கான நீண்டகால முயற்சிகளில் இந்தியா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் தொடர்ச்சியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி சர்வதேச ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பு, டித்வா சூறாவளி பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் அரசியல், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ஆதரவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.


















