அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
அதில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர், தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை எடுத்து வந்து துப்பாக்கிதாரிகள் இருந்த காரில் கொடுப்பது பதிவாகியுள்ளது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஹோக்கந்தர திசையை நோக்கிச் செல்வதும் அதில் காணப்படுகிறது.
அந்த நேரத்தில் குறித்த சட்டத்தரணியும் அந்தப் வீதி வழியாக வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அது குறித்துத் துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலங்கம, அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் வாகன தரிப்பிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகப் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனையின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு சென்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் நேற்று பிற்பகல் கொட்டாவையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘கரந்தெனிய சுத்தா’வின் ஆலோசனையின் பேரில் ‘டுபாய் நிபுண’ மற்றும் ‘மல்வானை டுடூ’ ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்தது.


















