அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை – நக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கரந்தெனிய சுத்தாவின்’ மிக நெருக்கமான மற்றும் திறமையான துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர் கனங்கே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மனோஜ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடற்படையில் 11 ஆண்டுகள் பணியாற்றி சட்டப்பூர்வமாக விலகியவர் என்பதுடன், ‘ரூபஸ் ரமேஷ்’ என்ற பெயரில் போலி கடவுச்சீட்டையும் வைத்திருந்தார்.
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உட்பட இதுவரை 6 கொலைச் சம்பவங்களில் இவர் துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரி புகைப்படம் வெளியிட்டிருந்தனர். இதற்கமைய, மொனராகலை – நக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இவர் மறைந்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், மொனராகலை பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட தினுஜன சந்தருவன் என்பவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த இவர், கொலைச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயணித்த காரைச் செலுத்தியவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர் ‘கரந்தெனிய சுத்தாவின்’ உறவினர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவருடன் கைதான கெலும் சுஜீவ என்பவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். இவர் சந்தேகநபர்களுக்கு மொனராகலையில் தங்குமிட வசதி செய்துகொடுத்துள்ளார்.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் இருந்த காலப்பகுதியிலேயே மனோஜ் உதயங்கவுக்கும் ‘கரந்தெனிய சுத்தாவிற்கும்’ இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வந்த கெலும் சுஜீவ என்பவரை தொலைபேசியில் அழைத்த பாதாள உலகக் குற்றவாளியான ‘பெத்தியாகொட சங்க’, ‘ஒரு பையன் இருக்கிறான், வேலைக்கு எடுத்துக் கொள்’ எனக் கூறி முதலில் சாரதியையும், பின்னர் 5 நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிதாரியையும் அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.


















