-விஜேதாஸ ராஜபக்ஷ-
சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ, இந்த நடவடிக்கை நாட்டை அராஜக நிலைக்கே இட்டுச் செல்லும் எனவும் கூறினார்.
சட்டமா அதிபர் விவகாரம் தொடர்பாகவும், கணக்காய்வாளர் நியமனம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் குறித்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரை பதவி நீக்க முயற்சிப்பது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்.
கடந்த தேர்தல்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடனேயே இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்று சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாகும்.
ஆனால் அந்த வாக்குறுதியை வழங்கிய ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் கணக்காய்வாளர் நாயகத்தை எப்போது நியமிக்கப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இடம்பெறும் சகல ஊழல், மோசடிகளையும் மறைப்பதற்கான சிறந்த முறைமையை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. கணக்காய்வாளர் இன்றி நாட்டை ஆட்சி செய்வதே அந்த முறைமையாகும்.
அரசியலமைப்பிற்கமைய கணக்காய்வாளர் இன்றி நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. அதேபோன்று அரசியலமைப்பிற்கமைய பிரதம நீதியரசர் ஒருவர் இன்றி ஒரு நாள் கூட நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. பிரதம நீதியரசர் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பும் செயலிழக்கும். இந்த வரிசையில் சட்டமா அதிபரும் கணக்காய்வாளரும் இன்றி நாட்டில் ஆட்சி இடம்பெறாது.
மாறாக இவர்கள் இன்றி முன்னெடுக்கப்படும் ஆட்சி ஜனநாயகத்துக்கு முரணானதாகும். கணக்காய்வாளர் பதவிக்கு தகுதியான ஒருவரை பெயர் குறிப்பிட முடியாத நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்பதன் மூலம் அதன் பலவீனம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக அரசாங்கம் ஆதரவாளர்களை ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
எமது நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறாத ஒழுக்கக்கேடான அரசியல் கலாசாரத்தின் ஆரம்பமாகவே சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தற்போதைய சட்டமா அதிபர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியாள் எனக் கூறியே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தான் இந்த சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டார். அவரது பெயரை முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்த போது, அதன் உறுப்பினர்கள் எவரும் அதற்கு எதிர்ப்பினை வெளியிடவில்லை. இந்நிலையிலேயே இந்த அரசாங்கம் அவர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கிறது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய பயணம் குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த வழக்கில் மாத்திரமல்ல, எந்தவொரு வழக்கிலும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.
வழக்கறிஞர்கள் ஐவர் இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பர். அந்த வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சட்டமா அதிபர் திணைக்களமே உள்ளக கலந்துரையாடல்கள் மூலம்; தீர்க்கும்.
அதனை விடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் தேவைகளுக்கேற்ப சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியாது. சட்டமா அதிபரின் தீர்மானத்துக்கு அப்பால் அரசாங்கத்தால் செயற்பட முடியாது.
மாறாக சட்டமா அதிபரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாயின் அதற்கு நீதிமன்றத்தை நாட முடியும். அதனை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் ஊடாக சட்டமா அதிபரை இழிவுபடுத்துவதானது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என்றார்.


















