தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் ‘சமித்புர சது’ எனப்படும் திமுது சதுரங்க என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய, சேதவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு துப்பாக்கியைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த 28 வயதுடைய இச் சந்தேகநபர், சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரை வைத்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபர் அளித்த தகவலின் பேரில், நேற்று வெள்ளிக்கிழமை (21) வெள்ளம்பிட்டிய, சேதவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் வகை துப்பாக்கியை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்


















