நாட்டில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பல முக்கிய குற்றவாளிகள் சரணடையத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சர்வதேச நாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் சுனில் வட்டகல இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
சர்வதேச ரீதியில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக பல முக்கிய குற்றவாளிகள் தாம் சரணடையத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அரசாங்கம் சர்வதேச ரீதியில் ‘சிவப்பு அறிவித்தல்’ எச்சரிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், இனி தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தே இக்குற்றவாளிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கின் மூலம் இத்தகைய குற்றப் பின்னணிகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தகைய பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளதால், பொலிசார் தடையின்றி மேல்மட்டத் தலைவர்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.


















