-உதய கம்மன்பில கண்டுபிடித்தார்-
2004 சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசி சுமார் 1.3 பில்லியன் டொலர் நிவாரண நிதியை பெற்றுக் கொடுத்ததாக கூறியுள்ள உதய கம்மன்பில, இன்றைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவ்வாறான வெளிவிவகார திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும், சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கம் அநாதையாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், அனர்த்த நிலைமையின்போது வெளிநாடுகளில் இருந்து அதிக நிதி கிடைத்ததாகவும், ஊழல் மோசடி இல்லாத காரணத்தால் உலக நாடுகள் உதவி கரம் நீட்டியதாகவும் அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது.
உண்மையில் வெளிநாடுளில் இருந்து அதிகளவில் நன்கொடை நிதி கிடைத்ததா என்பதை ஆராய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து 0.17 சதவீதமளவிலான நிவாரண நிதியே இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளது. அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 6 முதல் 7 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார். திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதியத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகளவான நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு 1.5 பில்லியன் டொலர் என்று மதிப்பிடப்பட்டது. உலக நாடுகளிடமிருந்து 1.3 பில்லியன் டொலர் நிதி நிவாரணம் கிடைக்கப்பெற்றது.
அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் கதைத்து, இலங்கைக்கு நிவாரண நிதியை பெற்றுக்கொண்டார். அதேபோல் சர்வதேச ஊடகங்களிடம் கலந்துரையாடி இலங்கையின் அவல நிலையை உலகுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினார். வெளிவிவகார கொள்கையை சிறந்த முறையில் செயற்படுத்தி அவர் அப்போதைய நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்தார்.
இந்த அரசாங்கம் வெளிவிவகார கொள்கையில் தோல்வியடைந்துள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. உதவிகளை கோரவில்லை. அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் அநாதையாக்கப்பட்டுள்ளது என்றார்.
















