-ஜ.நா.வில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கடும் அதிருப்தி-
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரச பாதுகாப்புச் சட்டமூலமானது பழைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை அச்சங்களை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில், பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘இலங்கை தொடர்பான பிரதான நாடுகளின் குழு’ (Core group) சார்பில் இந்த விசேட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளுக்கு முரணாக அமைந்திருப்பதாக கவலை வெளியிட்டுள்ள அக்குழு, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் வேகம் மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
அத்துடன், நிலைமாறுகால நீதி மற்றும் இனவாற்றிற்கு எதிரான ஜனாதிபதியின் வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், நடைமுறையில் அவற்றுக்கான உறுதியான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என பிரித்தானிய பிரதிநிதி எலினோர் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும், உள்நாட்டு நீதித்துறை நிறுவனங்கள் பலவீனமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்கியமை நல்லிணக்கத்திற்கான முக்கிய நகர்வு எனப் பாராட்டியுள்ள அக்குழு, கடந்த நவம்பரில் ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளுக்குத் தனது இரங்கலையும் பதிவு செய்துள்ளது.


















