சாலை விபத்துகளை தடுக்க அனைத்து கார்களிலும் தானியங்கி பிரேக் அமைப்பை 2030 முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கார்களில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (ஏடிஏஎஸ்) சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2030 அக்டோபர் முதல், அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் (ஏஇபிஎஸ்) பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2030-க்கு முந்தைய, தற்போது உற்பத்தியில் உள்ள மாடல்களுக்கு, 2032 அக்டோபர் முதல் ஏஇபிஎஸ் கட்டாயமாக்கப்படும். ஏடிஏஎஸ் பாதுகாப்பு அம்சங்களின் காலக்கெடு அடங்கிய வரைவு அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
பாதுகாப்பு அம்சங்களில் வர்த்தக வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, மறைவுப் பகுதி தகவல், ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு மற்றும் பாதை விலகல் எச்சரிக்கை அமைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
ஏடிஏஎஸ், ஏஇபிஎஸ் என்றால் என்ன?
ஏடிஏஎஸ் என்பது 100-க்கும் மேற்பட்ட மின்னணு தொழில்நுட்பங்களின் ஒரு தொகுப்பாகும். இது ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிந்து, ஓட்டுநரை எச்சரித்து, சில சமயங்களில் மோதலைத் தடுப்பதற்காக பிரேக்குகள் அல்லது ஸ்டீயரிங்கைத் தானாகவே கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது. தற்போது, சில கார்களில் ஏடிஏஎஸ் வசதி உள்ளது.
ஏஇபிஎஸ் அமைப்பு, ஒரு வாகனம் அல்லது தடையுடன் ஏற்படவிருக்கும் மோதலைக் கண்டறிந்து, ஓட்டுநர் சரியான முறையில் செயல்படத் தவறினால் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், விபத்தைத் தடுக்கிறது. 2027 ஜனவரி முதல், புதிய லாரி மற்றும் பேருந்து மாடல்களில் ஏஇபிஎஸ் அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது.


















