-பிரதேச செயலர் அறிவுறுத்தல்-
-த.சுபேசன்-
தென்மராட்சி பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபையின் ஆளணி உதவியுடன் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் இரண்டு தினங்களாக கடலுக்கு கடத்தப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்பு தரை வட்டாரத்தில் அமைந்துள்ள மேற்படி குளம் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக மாரி காலத்தில் நிறைவதால் அப்பகுதியில் உள்ள சுமார் 100 குடும்பங்கள் வரை பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் சாவகச்சேரி நகரசபை கடந்த மாதம் குளத்தை தூர்வார்ந்து நீரின் கொள்ளளவை அதிகரித்திருந்தது. இருப்பினும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குளம் நிறைந்து அருகில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்;தத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இதனை நேரடியாக அவதானித்த தென்மராட்சி பிரதேச செயலர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பம்பி மற்றும் சாவகச்சேரி நகரசபையின் ஆளணி வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேலதிக வெள்ள நீரை கடலுக்குள் கடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
குளத்தின் மேலதிக நீர் வடிந்தோடும் வாய்க்கால் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டடங்களால் முற்றாக தடைப்பட்டிருப்பதாலும் அதனை மீள உருவாக்குவதில் பல சவால்கள் காணப்படுவதாலும் உடனடித் தீர்வாக தனியார் காணி ஒன்றின் ஊடாக வெள்ள நீர் கடத்தப்பட்டு வருகின்றது. அதேவேளை மேற்படி குளத்திற்கான நிரந்தர வாய்க்கால் அமைக்கும் முயற்சியையும் பிரதேச செயலகம் மற்றும் நகரசபை ஆகியன முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















