-நீதிபதி அலெக்ஸ்ராஜா அதிரடித் தீர்ப்பு-
-சு.பாஸ்கரன்-
முல்லைத்தீவில் 12 வயதுச் சிறுமியை பாலியல் வன்புனர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கிளிநொச்சி மேல்நீதிமன்ற நீதிபதி யு.பு.அலெக்ஸ்ராஜா தீர்ப்பளித்தார்.
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
அவருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்திருந்தன. குறித்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்;தது.
பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கிளிநொச்சி மேல்நீதிமன்ற நீதிபதி யு.பு.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கின் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரன சிறைத்தண்டனையும் அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


















