போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக் கூடாது. அவர்களின் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டின் நற்பிரஜையாக உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















