மாவட்ட ரீதியாக சிறுவர் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ப்ரீத்தி இனோகா ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டங்கள், சிறுவர் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஐந்தாண்டு கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஊடகவியலாளர்கள் சிறுவர்கள் தொடர்பான செய்திகளை கையாளும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்களை கையாளும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

















