சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கு தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசல் குறித்து ஆராய்வதற்கு 2025.03.14 ஆம் திகதியன்று மீளாய்வு முறை நடவடிக்கை ஊடாக தண்டனை காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்கான யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு அமைச்சரவை 2025.06.02 ஆம் திகதி அனுமதி வழங்கி சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இக்குழு 2025.07.18 ஆம் திகதியன்று முதலாவதாக கூடி விடயங்களை பரிசீலனை செய்தது. இருப்பினும் சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசலைக் குறைப்பதற்கு இந்த குழு இதுவரையில் பரிந்துரை சிபாரிசுகளை முன்வைக்கவில்லை.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை இல்லாமல் இவர்களுக்கு பிணை வழங்க முடியாது. திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்படுகிறது. ஆகவே இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.


















