சீனாவின் உத்தேச அம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இறுதி செய்யப்படவுள்ளது.
3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த முதலீடு, இலங்கையின் எரிசக்தி துறையில் மட்டுமல்லாது, தெற்காசியாவின் புவிசார் அரசியலிலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, இத்தகைய பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானதாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் தேவையில் சுமார் 40 வீதம் வரை பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்கள் என்ற அளவில் திட்டமிடப்பட்ட இந்த நிலையம், தற்போது 200,000 பீப்பாய்களாக விரிவாக்கப்படவுள்ளது. சினோபெக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 500 ஏக்கருடன் மேலதிகமாக 200 ஏக்கர் வழங்கப்பட்டு, தற்போது மொத்தம் 700 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
80 வீத ஏற்றுமதி மற்றும் 20 வீத உள்நாட்டு விற்பனை என்றிருந்த நிலையில், சினோபெக் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் அதிக இடத்தைப் பெற பேச்சுவார்த்தை நடத்தியது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.


















