அண்மைய சீரற்ற வானிலையால் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.
இந்நிலையில் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், குறித்த நன்னீர் மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கெண்டார். அத்தோடு மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையினால் முத்துஐயன்கட்டு குளத்தின் கரையில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த 15 சிறிய படகுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் குளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதேவேளை குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், குளத்தில் விடப்பட்டிருந்த மீன்குஞ்சுகள் மற்றும் மீன்கள் என்பன வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாரிய வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள தமக்கு இதுவரை நிவாரணங்களையோ, இழப்பீடுகளையோ வழங்குவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
















