சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதார பணி உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் ஏற்கனவே சுகாதாரத்துறையில் பணியாற்றி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பின்னர், அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 மார்ச் மாதம் அப்போதைய அரசாங்கத்தினால் சுகாதாரப் பணி உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பலரை புறக்கணித்து அரசியல்வாதிகள், ஒரு நாள்கூட தொண்டுப் பணியில் ஈடுபடாத பலரை உள்வாங்கி நியமனம் வழங்கப்பட்டது. இதனால் 384 சுகாதாரத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டனர்.
யுத்த காலத்தில் வடமாகாண சுகாதாரத்துறையில் பெரும் ஆட்பற்றாக்குறை நிலவிய காலத்தில், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் ஆற்றவேண்டிய பெரும் பணிகளை மேற்படி சுகாதாரத் தொண்டர்களை பயன்படுத்தி நிறைவேற்றிக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்னர் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஏனையோருக்கு நியமனங்களை வழங்கிவிட்டு இவர்களை நடுத்தெருவில் விட்டனர்.
தாம் புறக்கணிக்கப்பட்டமையை எதிர்த்து பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் 384 பேருக்கு 2019.11.18 ஆம் திகதியிடப்பட்ட நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கியது. நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகளில் பணிகளைப் பொறுப்பேற்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் வைத்தியசாலை நிர்வாகங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படாததால் இவர்கள் வைத்தியசாலைகளுக்கு சென்றபோது திருப்பி அனுப்பப்பட்டனர்.
நிரந்தர நிமயனக் கடிதங்களை வழங்கிவிட்டு தங்களை பணியில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிராக அவர்களில் 140 தொண்டர்கள் இணைந்து நிதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இன்றுவரை வழக்கு நீதிமன்;றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் நிலவும் 1939 சுகாதாரப் பணி உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இந்த நியமனத்தில் தமக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் விநயமாக கோரிக்கை விடுத்தனர்.


















