-கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியின் வங்கி கணக்கை முடக்குமாறு கோரியுள்ளேன்.
கட்சி தற்போது பல நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில வருடங்களாக எந்தவொரு தேர்தலிலும் கட்சிக்குத் தனித்துப் போட்டியிட முடியாமல் போயுள்ளது.
இவ்வாறே வழக்குகள் தொடர்ந்தால், கட்சி மக்களிடமிருந்து முற்றாக அந்நியப்பட்டுப் போகும் அபாயம் நிலையுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள ஒரு குழுவினர், கட்சியின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது கட்சியின் சாதாரண உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம். நிதி விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் அவதானமாக இருக்க வேண்டும். கட்சியின் நிதியைச் சட்டவிரோதமான முறையில் கையாளுபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















