இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும், அரசமைப்புக்கும் எதிராக செயற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச செயலாளர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
சுதந்திர தின அணிவகுப்பின் போது இராணுவப்படை பிரிவுகளை முறையாக அறிமுகப்படுத்தும் மரபு இம்முறை மீறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரிய உயிர்த் தியாகத்தால் ஈட்டப்பட்ட யுத்த வெற்றியையும், இராணுவத்தின் கௌரவத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறுமைப்படுத்துகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி அருகில் கடந்து செல்லும் போது ஒவ்வொரு இராணுவப் பிரிவின் விசித்திரங்கள் மற்றும் சாதனைகள் வழக்கமாகச் சொல்லப்படும். ஆனால் இம்முறை அத்தகைய கௌரவம் வழங்கப்படாமல் ‘டித்வா’ சூறாவளி பற்றி மட்டுமே சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தின் போது தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் முன்னிலையிலேயே இந்த செயல் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செய்தியையோ அல்லது அவர்களது தேவைகளையோ நிறைவேற்றுகின்றாரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விடயங்களை முன்வைக்க வேண்டாம் எனப் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.இந்த அரசு ஒரு தனிப்பட்ட தேவைக்காகச் செயற்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















