-விமல் வீரவன்ச பரபரப்பு தகவல்-
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவரை பாதுகாப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசியல் பழிவாங்களுக்காகவே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு துப்பரவு இல்லாத சிறைக்கூண்டில் அவரை அடைத்து வைத்துள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றத்துக்கு இதுவரையில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் எலிகள் ஓடித் திரியும் சிறைக்கூண்டில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சுகாதார வசதியற்ற மலசலக்கூடத்துக்கு அருகில் சலேவை வைத்திருப்பதால் அவர் நோயாளியாக்கப்படுவார். சிறைக்கூண்டில் வைத்தவாறு அவரை கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது. சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்கு கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகவுள்ளோம்.நாட்டு மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார்.


















