-பிரதி அமைச்சர் ரத்ன கமகே-
தற்போது நடைமுறையிலுள்ள கரவை வலை மீன்பிடித் தடையானது, கடல்சார் சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானமே தவிர, தன்னிச்சையான முடிவல்ல என கடற்றொழில்இ நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கையிலேயெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
கரவை வலை மீனவர் சங்கம் தமது வழக்கை மீளப் பெற்றுக்கொள்ளுமிடத்து,கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சூழலியலாளர்கள் மற்றும் ஏனைய சிறிய அளவிலான பாரம்பரிய மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஒரு நியாயமான தீர்வுக்கு வர முடியும் .
எமது அரசாங்கம் வெறும் கைதட்டல்களுக்காகவோ அல்லது ஆரவாரங்களுக்காகவோ தீர்மானங்களை எடுப்பதில்லை. நாம் கூறும் உண்மையை அனைவரினதும் மனசாட்சி ஏற்கும். இது குறித்து எந்த நேரத்திலும் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். பல வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவிப்பிலேயே கரவை வலை மீன்பிடி தொடர்பான சட்ட நிபந்தனைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிபந்தனைகளை மீறியே இத்தனை காலமாக மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலைய அறிக்கையிலும், இவ்வகை மீன்பிடி முறையால் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதால் இதனைத் தடை செய்யுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை மீறியே ஒரு சில மீனவர்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் அழிவைக் கருத்திற் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு மீனவர்களிடம் கோருகின்றேன் என்றார்.


















