சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல ‘அபே கம’ வளாகத்தில் நேற்று நடைபெற்ற உலக சதுப்புநில தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நமது நாட்டின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமை மற்றும் விவசாய நடைமுறைகளுக்குள் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத ஒருவித விசேட விஞ்ஞான அறிவு பொதிந்திருக்கின்றது.
அறிவு என்பது ஒரு வடிவத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எமது பிள்ளைகள் இந்தப் பாரம்பரிய அறிவைக் கற்க வேண்டும்.
சதுப்பு நிலங்கள் என்பது வெறும் சேற்று நிலங்கள் மாத்திரமல்ல, அவை நாட்டின் நீர் பாதுகாப்பு, காலநிலை ஸ்திரத்தன்மை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் இயற்கைக் கேடயமாகும்.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி போன்ற காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குச் சூழலைச் சரியான முறையில் பாதுகாப்பது அவசியமாகும்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படை அத்திவாரம் இயற்கை வளங்களை பாதுகாப்பதே ஆகும் என்றார்.


















