தெற்கு டார்பூரின் தலைநகரான நியாலா நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றின் மீது சூடானிய இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த தாக்குதலில் மேலும் 113 பேர் காயமடைந்தனர் என்று மனித உரிமைக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்துள்ளது.
சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவது, பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
சூடானில் வன்முறையைக் கண்காணிக்கும் ‘எமர்ஜென்சி லொயர்ஸ்’ (Emergency Lawyers) என்ற குழு, திங்கள்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குச் சூடானிய இராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அக்குழு, இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள அந்த அமைப்பு, இது பொதுமக்களுக்கான சந்தைப் பகுதியை பெருமளவிலான உயிரிழப்புகள் நிகழும் இடமாக மாற்றியிருப்பதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் அப்பகுதி மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


















