-AI Impact மாநாட்டில் ஜனாதிபதி-
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும், கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் நேற்று வியாழக்கிழமை அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்ண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது.
தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம்.
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது.
எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு, புதுடில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.


















