வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது.
வவுனியாப் பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.
நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்போடு இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்ட நிலையிலும், மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இயங்காநிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடம் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளினால் செயற்படாமல் இருந்தது.
இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்களும், கிழக்கு மாகாண மக்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.
குறித்த நிலையை உணர்ந்துகொண்ட சுகாதார அமைச்சு அதனைத் தீர்ப்பதற்குரிய மூலோபாய நடவடிக்கையாக வெளிநாட்டில் பயிற்சி பெற்று நாடு திரும்பிய துடிப்பு மிக்க இருதய சிகிச்சை நிபுணர் தி. வைகுந்தன் அவர்களை வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமித்த பின்னர் குறித்த இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ். மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சிகிச்சை நிபுணர் பி. லக்ஸ்மன் உள்ளிட்ட அணியினரின் அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டலுடனும், பங்களிப்புடனும் இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.
இதன்மூலம் எமது பிரதேச மாரடைப்பு நோயாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிகிச்சை வழங்கப்பட ஏதுவாகியுள்ளதுடன், இலங்கையில் பல போதனா வைத்தியசாலைகளில் கூட இன்னமும் இல்லாத சேவையை வடமாகாணத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அடுத்து இரண்டாவது இடமாக வழங்கும் பெருமையை வவுனியா பொது வைத்தியசாலை பெற்றுள்ளது.
















