குற்றக் கும்பல்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு உதவிய ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலைச் சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் ஆட்கடத்தல்காரரின் உதவியுடன், இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து பின்னர் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு உதவிய ஆட்கடத்தல்காரர், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
மேலும், கைதான ஆட்கடத்தல்காரரின் தொலைபேசி இலக்கத்தை கொண்டு அவருடன் தொடர்புபட்டுள்ளவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், குறித்த நபர் ஆட்கடத்தலுக்காக தலா 25 தொடக்கம் 30 லட்சம் ரூபாய் பணத்தை வசூலித்துள்ளதாகவும், குற்றக் கும்பல்களை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்வதற்கு இவர் உதவியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


















