ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின் அமைக்கப்பட்டிருந்த விசேட அறை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, மேற்படி விசேட அறை மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்கள் கொண்ட கொள்ளளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தின்படி ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 1001 ஆம் இலக்கத்தைக் கொண்ட இந்த விசேட அறையும், மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்தது.
வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 42 ஆண்டுகளில் இந்த அறை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் வருகையை எதிர்பார்த்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாமல் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


















