இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் வியாழக்கிழமை உரையாற்றவுள்ளார்.
5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















