-கணக்காய்வில் அம்பலம்-
2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது. எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















