ஜனாதிபதி நிதியிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கண்டி – மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
கண்டி – மஹையாவ பூர்ணாவத்த மேற்கு கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025 மே மாதம் 31ஆம் திகதியன்று ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டது.
அதன் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி இந்த நிகழ்வின் முதல் கட்டமாக 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















