-முன்னாள் எம்.பி. திஸ்ஸ குட்டியாராச்சி-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொடர்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன் கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லையென பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை ஒருபோதும் நாங்கள் குழப்பப் போவதில்லை. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம். புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சிறந்த அதிகாரி. விசாரணைக்காகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மாத்திரமல்ல யாராக இருந்தாலும் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு அழைத்தால் அதற்கு செல்ல வேண்டும். தகவல்கள் தெரிந்திருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். எங்களை அழைத்தால் நாங்களும் செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















