அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும், வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் முறை கையொப்பங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும், இந்தத் தொழில்நுட்பத்தை கிராம அலுவலர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த முயற்சிக்கு அமைவாக, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் இல. 19, 2006 இன் ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை இலக்கமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு அமைவாக, டிஜிட்டல் முறைமை கையொப்பங்களை வழங்குவதற்கான அதிகாரியாக லங்கா பே நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமை உத்தியோகபூர்வ கடிதப் பரிமாற்றங்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, விரைவான, மிகவும் வினைத்திறன் மிக்க, பயனுள்ள அரச சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















