அண்மையில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, நாட்டின் மத்திய மலைநாட்டு இயற்கை வனப் பகுதிகளில் 34 சதவீதம் சேதமடைந்துள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் தனித்துவமான இயற்கை வன சுற்றுச்சூழல் அமைப்புகள் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, இப்பகுதியிலுள்ள 34 வீதமான காடுகள் அழிவடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காகச் சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழு, தனது பூர்வாங்க அறிக்கையை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த இயற்கை அனர்த்தத்தினால் நாட்டின் ஏழு பிரதான நதிப் படுக்கைகளின் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய மலைநாடு மட்டுமன்றி, இலங்கையின் கடலோரச் சூழல் மற்றும் களப்பு பகுதிகளும் இந்தச் சூறாவளியினால் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளன.


















