‘டித்வா’ சூறாவளியால் இலங்கைக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்டவைக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும்.
வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்கு சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலரும், நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















