இலங்கையில் கடந்த வருடம் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக தற்போது வரை 22.4 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















