-வெள்ளத்தில் சிக்கியுள்ள 300 குடும்பங்கள்-
-1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு-
-நிவாரண உதவிகளை வழங்கும் கடற்படை , விமானப்படை-
டித்வா பேரிடரினால் மன்னார் மாவட்டம் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்றளவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை வரையில் பெறப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் சுமார் 40 ஆயிரத்து 605 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 36 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலர் பிரிவு ஓரளவு பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலும், நானாட்டான், முசலி, மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேசங்கள் மிகமோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
பெரியமடு, கூராய், சீது விநாயகர்புரம், இசைமானத்தாழ்வு உள்ளிட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்களுக்கு கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுமார் 822 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 22 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன. 106 இடைத்தங்கல் முகாம்களில் 3767 குடும்பங்களை சேர்ந்த 11800 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேசமயம், மாவட்டத்தில் இரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும், கடந்த மாதம் 29ம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வரை சுமார் 58 பொதுமக்கள், இராணுவம் – கடற்படையின் கூட்டு முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளனர். முன்னார் மாவட்ட நிலமைகள் தொடர்பில் மாவட்டச் செயலர் கனகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, மடு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுகுளம் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வெளிவர முடியாத நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களின் குடியிருப்புகள் உயரமான பகுதிகளில் காணப்பட்டாலும் குறித்த பகுதிக்கு செல்லும் பாதைகள் தாழ்வாகக் காணப்படுவதால் அனைத்து வீதிகளையும் வெள்ள நீர் மூடியுள்ளது.
அவர்களுக்கான உணவு விநியோகத்தை கடற்படை மற்றும் ஆகாயப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மேற்கொள்ளக்கூடிய ஒழுகுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இன்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பகுதிகளுக்கு சென்று, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வார் என அரசாங்க அதிபர் கூறினார்.
பல ஆயிரம் கால்நடைகள் மாயம்
வடமாகாணத்தில் அதிகளவில் கால்நடைகள் வளர்க்கப்படும் மன்னார் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் காணாமல்போயுள்ளதாக மாகாண கால்நடை திணைக்கள, மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வசீகரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இன்றும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதால் கால்நடைகள் தொடர்பில் முறையான கணக்கெடுப்பு செய்யவில்லை என்றார்.


















