டித்வா பேரிடரினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 3 பில்லியன் முதல் 5 பில்லியன் ரூபா வரையான (ரூபா300 கோடி முதல் 500 கோடி) நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் முதல் பெய்த பலத்த மழையையும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையையும் அடுத்து, நவம்பர் 27ஆம் திகதி இரவு 11 மணியளவில் பாரிய வெள்ளம் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது.
இதன் காரணமாகப் பிரதானமாக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம், உள் விளையாட்டரங்கம், பல்கலைக்கழக கணினி நிலையம், தொலைநிலை மற்றும் தொடர்ச்சிக் கல்வி நிலையம், நிருவாகப் பகுதி, சமூக விஞ்ஞான முதுகலை நிறுவனம், பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர திறந்தவெளி அரங்கம் மற்றும் சரஸவி மந்துர மாணவர் விடுதி ஆகி யன வெள்ளத்தில் மூழ்கின என்று உபவேந்தர் தெரிவித்தார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல அதிநவீன உபகரணங்கள் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் சேதமடைந்த உபகரணங்களில் உள்ள இரண்டு சேர்வர்களின் சந்தை மதிப்பு மாத்திரம் 60 மில்லியன் ரூபாவைத் தாண்டும். மேலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி உபகரணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாவாகும் என்றும் உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாக சுமார் மூன்று மணித்தியாலங்களுக்குள் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதனால் இரண்டு விடுதிகளில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் உபவேந்தர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகத்தில் இருந்த 2000 லீட்டர் கொள்ளளவு கொண்ட 7 பிளாஸ்டிக் நீர்த் தாங்கிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்துடன் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள சேறு கலந்த அசுத்தமான பொருட்களை அகற்றி, துப்புரவு செய்யும் திறிபவுர சிரமதானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
















