‘டித்வா’ பேரிடரினால் நுவரெலியா – றேந்தபொல – ஹக்கலை பகுதிகளில் உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் தறப்பாள் கூடாரங்களில் வாழந்து கொண்டிருக்கும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தபோதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். இவர்கள் வசித்துவரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
மழை நேரத்தில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர். மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அத்தோடு, 23 குடும்பங்களுக்கு எனப் பொதுவாக 5 மலசலக்கூடங்கள் மாத்திரமே காணப்படுவதால், சுகாதாரச் சீர்கேடு நிலவுவதுடன், தோல் நோயினாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எமது அவல நிலை குறித்துப் பலரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. எமக்கென ஒரு எதிர்காலம் இருக்குமா என்றே தெரியவில்லை என கண்ணீர்மல்க கூறும் மக்கள், தங்களுடைய வீடுகளை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















