டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 18 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தனது மனிதாபிமான உதவிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சுகாதாரம், தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பான அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்காக, உள்ளுர் அமைப்புக்களுடன் இணைந்து எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு 1,000 குளிர்காலத்திற்கு ஏற்ற தற்காலிக கூடாரங்கள் மற்றும் 1,500 கனமான பிளாஸ்டிக் தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சவாலான காலகட்டத்தில், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் போதிய தங்குமிடம் வழங்குவது மிக அவசியமானதாகும். இந்த குளிர்கால கூடாரங்கள் அந்த நோக்கில் முக்கிய பங்காற்றும். நிலைமைகள் மாற்றமடைந்தாலும், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உள்ளுர் அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ந்து உதவ எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு உறுதியாக உள்ளது என்று அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
















