-12 பேர் உயிரிழப்பு : 27 பேருக்கு காயம்
-இந்தியா, ஆப்கானிஸ்தான் தான் காரணம்
-பாகிஸ்தான் பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலைத் தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு பொலிஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இதாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார்.
இருப்பினும் இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

















