-அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை-
லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலைமை ஏற்பட்டவுடன் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.
2026 ஆம் ஆண்டுக்கு மாத்திரம் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயு தொகையை இறக்குமதி செய்வதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், 24 ஆயிரம் மெற்றிக்தொனும், பெப்ரவரியில், 28 ஆயிரம் மெற்றிக்தொனும் எரிவாயு தொகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இம் மாதம் 38 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யவுள்ளது. இவை 10 கப்பல்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படவுள்ளது.
தனியார் எரிவாயு நிறுவனம் தேசிய சந்தைக்கு முறையாக எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காத காரணத்தால் லிட்ரோ சிலிண்டருக்கான கேள்வி உயர்வடைந்துள்ளது. லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதாக தற்போது உறுதியளித்துள்ளது.
லாப் நிறுவனம் தமது நுகர்வோருக்கு தடையின்றி எரிவாயு சிலிண்டரை விநியோகிக்காவிடின், மஞ்சள் நிற சிலிண்டரை நீல நிற சிலிண்டராக மாற்றியமைக்கும் தீர்மானம் எடுக்கப்படும். நுகர்வோர் அதிகார சபைக்கு அதற்கான அதிகாரம் காணப்படுகிறது என்றார்.
















