எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக இன்று திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இன்றைய போக்குவரத்து நிலைவரம் மற்றும் கட்டணத் திருத்தம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிவேக நெடுஞ்சாலைகளிலான பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் அனைத்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தனியார் பஸ்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய பஸ் கட்டணத் திருத்தப் பரிந்துரைகள் இன்றையதினம் மாலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பஸ் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தில் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதோடு, ஆரம்பக் கட்டணம் முதல் அதிகபட்சக் கட்டணம் வரை சுமார் 350 வகையான கட்டணத் திருத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டண விபரங்கள் உடனடியாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


















