-கூறுகிறார் அமைச்சர் உபாலி பன்னிலகே-
போலியான தற்காலிக நிவாரணம் கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித போராட்டங்களும் இல்லாமல் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளதென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 03ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-
அடிமட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லையென்று குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் 78 ஆவது வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்திருக்கும். நாடும் அபிவிருத்தியடைந்திருக்கும்.
போலியான தற்காலிக நிவாரணமளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கைகளை அடைவதற்காக 6 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதைவிட அவர்களை தொழிற்றுறையில் முன்னேற்றுவதற்குரிய திட்டங்கள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களை நியாயமான முறையில் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களும் இல்லாமல் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே நாங்கள் எந்தத் தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை என்றார்.


















