-நாமல் ராஜபக்ஷ கேள்வி-
பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு வெட்கம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ராஜபக்ஷர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால், எந்தக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ராஜபக்ஷர்களுக்கு சொந்தமான ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும் என்ன நேர்ந்தது என்றும் தெரியவில்லை. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான காணியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பரிசோதகர் மீது ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்தினார். இதுவரையில் அந்த அரசியல்வாதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொலிஸார் மீது ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு வெட்கம் என்பது கிடையாதா, பொலிஸ்மா அதிபர் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றார்.


















