திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவுவரை உணவு, நீர் அருந்தாமல் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை டொக்கியாட் கடற்கரையோரமாக அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், அப்பகுதியில் புத்தர் சிலையை வைத்து குழப்ப நிலையை தோற்று வித்தமைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 11 பேருக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பௌத்த பிக்குகளும், 5 சிவிலியன்களுமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு நீதிமன்றுக்கு வருகை தராத இருவருக்கு பிடியாணையும் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை கைது செய்யப்பட்ட 4 பௌத்த பிக்குகளும் தனியான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மாத்திரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.


















