-உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் நம்பிக்கை-
-சொ.வர்ணன்-
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களான இளைஞர் யுவதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக பார்ப்பதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் வினோதினி சிறிமேனன் தெரிவித்தார்.
தெற்கிலிருந்து வருகை தந்த இளைஞர்,யுவதிகளை நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தெற்கில் இருந்து யாழ். வருகை தந்த இளைஞர்,யுவதிகள் ஏழு நாட்கள் தங்குவது மூலம் யாழ்ப்பாணத்தின் கலை, கலாசாரத்தை அறிவதற்கும் பழகுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இவர்கள் வேலனை, ஊர்காவற்துறை, காரைநகர், யாழ்நகர், நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இதில் வரவேற்கத்தக்க விடயம் என்னவென்றால் நாம் தீவகப் பகுதிகளை கஷ்டப் பிரதேசம் என தெரிவு செய்வதில் பின்னடித்த வேளையில் எமது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் கஷ்டப் பிரதேசம் என்றால் பரவாயில்லை எமது இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு அனுபவம் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் ஐந்து பிரதேசங்களுக்கு செல்லும் இளைஞர் யுவதிகள் அந்தப் பகுதிகளில் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலை கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆகவே இளைஞர் யுவதிகளிடம் நட்பு உறவையும் நல்லெண்ணத்தையும் வளர்ப்பதற்கு எமது தேசிய இளைஞர் சேவை மன்றம் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்தமையை நான் வரவேற்கிறேன் என்றார்.


















