கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொஸ்கம, ஹங்வெல்ல, தங்கொட்டுவ, மில்லாவ மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் வசிக்கும் 30 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மதுவரி திணைக்கள பரிசோதகர் எனவும் ஏனைய நால்வரும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த கடையை சேர்ந்த 7 பேரை கைது செய்திருந்ததுடன், சட்டவிரோத சிகரட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், அதில் 4 பேரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 50 மில்லியன் ரூபாயை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


















